×

ஒமிக்ரான் பரவலால் ஜெர்மனியில் கண்காட்சி ரத்து கரூரில் ரூ.1,000 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிப்பு-ஏற்றுமதியாளர்கள் கவலை

கரூர் : ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜெர்மனியில் நடைபெற இருந்த ஜவுளி கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் கரூரில் ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கவலையுடன் உள்ளனர்.ஜெர்மனி நாட்டில் பிராங்பர்ட் நகரில் உலக புகழ் பெற்ற ஜவுளி கண்காட்சி 2022 ஜனவரி 11ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற இருந்தது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை எடுத்து வருவது வழக்கம். இந்த ஜவுளி கண்காட்சியில் இந்தியா சார்பில் 350க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருந்தது. இதில் ஹரியானா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக கரூர் மாவட்டம் சார்பில் 45 அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.இந்நிலையில், உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.இதற்கிடையே ஜவுளி கண்காட்சி பிராங்பர்ட் நகரில் நடத்துவதால் நோய் பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையிலும் ஜெர்மனி அரசு இந்த கண்காட்சியை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதனால் இந்த கண்காட்சியை நம்பியிருந்த கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து கரூர் முன்னணி ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 7 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஆண்டுதோறும் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் உலக ஜவுளி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதியாளர்கள் கலந்து கொண்டு புதிய ஆர்டர்களை பெற்று வருவார்கள். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதுடன், அன்னிய செலவாணியும் அதிகரிக்கும்.கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் ஜவுளி கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டும் கண்காட்சியை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் அரங்குகள் அமைத்து அதில் கலந்து கொள்வதற்கான அனைத்து முன் ஏற்பாடு பணிகளும் தயார் செய்த நிலையில் தற்போது கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளித்துறை நலிவடைந்து உள்ள நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜெர்மனியில் நடைபெற இருந்த ஜவுளி கண்காட்சி ரத்து செய்யப்பட்டதால் இந்த தொழிலை நம்பியுள்ள 7லட்சம் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்….

The post ஒமிக்ரான் பரவலால் ஜெர்மனியில் கண்காட்சி ரத்து கரூரில் ரூ.1,000 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிப்பு-ஏற்றுமதியாளர்கள் கவலை appeared first on Dinakaran.

Tags : Omicron outbreak ,Germany ,Karur ,Omicron ,Omicron outbreak in ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: கர்நாடக அமைச்சர் தகவல்